ஊட்டி: நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்திருந்த நிலையில் ஊட்டியில் நேற்றும் உறைபனி கொட்டியதால் குளிர் வாட்டி எடுக்கிறது. நீலகிரியில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் நீர்பனி விழும். நவம்பர் மாதம் இறுதி வாரம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த வாரம் வரை மழை பெய்தது. இதனால், பனியின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் நீர் பனி கொட்டி வந்தது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைபனி கொட்டியது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம் போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது.
இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது. உறைப்பனி விழுந்த நிலையில் நேற்று காலையும் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகியிருந்தது. பனி பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் அதிகமாக உள்ளது. குறிப்பாக பைக்காரா, கிளன்மார்கன், தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.
The post ஊட்டி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உறைபனியால் வெண்மையாக மாறிய புல் மைதானங்கள்: வாட்டும் குளிரால் மக்கள் அவதி appeared first on Dinakaran.