கொள்கை பேசி இளைஞர்களை அரசியல் மயப்படுத்தி வருகிறீர்கள். அப்படி இருக்கையில் திரைக்கவர்ச்சி மூலம் நடிகர்கள் அதை கபளீகரம் செய்வது வேதனையாக இல்லையா? – எதையும் எதிர்த்து போரிட்டு, தூய கட்டமைப்பை ஏற்படுத்துவது தான் ஒவ்வொரு புரட்சியாளரின் கடமை. எதுவுமே இல்லாமல், கட்டமைப்பை கைப்பற்ற, நாங்கள் கருணாநிதியின் மகனோ, பேரனோ இல்லை. மாறுதல் என்பது ஒரு நொடியில் வராது. அதுபோல, திரைக் கவர்ச்சியையும் வீழ்த்தி, எழுந்து மேலே வரவேண்டிய தேவை உள்ளது.
அங்கீகாரம் பெற்ற கட்சி என்ற அந்தஸ்துக்கு வந்திருந்தாலும் எந்தப் பதவிக்கும் வரமுடியாவிட்டால் யாருக்குமே சோர்வு ஏற்படத்தானே செய்யும்? – எதற்கும் துணிந்த நேர்மையான இளைஞர்கள் ஒரு நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் அறுவடைக்கான நாளில்லை. விதைப்பதற்கான நாளாகவே கருதுகிறேன். நான் விதைத்ததில், 36 லட்சம் விதைகள் விளைந்திருக்கிறது. இவர்கள் ஆளுக்கு ஒரு விதை ஊன்றினால், அது 72 லட்சமாக மாறாதா?