வாஷிங்டன்: எங்கள் மக்களை பாதுகாக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு; தீவிரவாதிகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ கூட்டமைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமானதாகவும், தடையற்றதாகவும், சட்டங்களின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைக் கொண்டதாகவும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மட்டுமின்றி, கடல்சார் பாதுகாப்பு, கல்வி, வர்த்தகம், தொழில்நுட்பம் என பல்துறைகளிலும் இந்த நாடுகள் தங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பதற்றமான சூழல் நிலவிவரும் வேளையில், உலகின் பொருளாதார இயந்திரமாகத் திகழும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மிக முக்கியமானது என குவாட் நாடுகள் கருதுகின்றன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ‘தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி, ‘தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், தாக்குதல் நடத்துபவர்களையும் ஒருபோதும் சமமாகப் பார்க்கக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிராக எங்கள் மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு; அடுத்த குவாட் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது’ என்றும் அவர் அறிவித்தார்.
The post எங்கள் மக்களை பாதுகாக்க முழு உரிமை உண்டு; தீவிரவாதிகளை மன்னிக்க முடியாது: குவாட் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம் appeared first on Dinakaran.