சென்னை: கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை, ‘பாவம் அந்த ஆளு… விட்டுடுங்க’ என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கிண்டல் செய்துள்ளார். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் நேற்று திமுக நடத்திய கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா முதல்வர், கர்நாடகா துணைமுதல்வர், ஆந்திரா முன்னாள் முதல்வர் உள்ளிட்டோர் சென்னை வந்தனர். அப்போது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கேரளா, கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்கள் சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாஜவின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், “பாஜவின் கருப்பு கொடி போராட்டத்தை வரவேற்கிறேன். அந்த அதிகாரி (அண்ணாமலை) பாவப்பட்ட மனிதர். எங்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது எங்களுக்கு வேலை செய்தார். எனவே, அண்ணாமலைக்கு எங்கள் பலம் தெரியும். அவர் வேலையை அவர் செய்யட்டும். விட்டுவிடுங்கள்.
அவருக்கு என் வாழ்த்துகள்” என்றார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள அண்ணாமலை, ‘‘ஆமாம், நான் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது கர்நாடக மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்துள்ளேன். அதை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி. மேலும், இந்த பாவப்பட்ட மனிதருக்கு வாழ்த்து கூறியதற்கும் மிக்க நன்றி. சித்தராமையாவை கவிழ்த்துவிட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்’’ என கூறி உள்ளார்.
The post எங்க கிட்ட வேலை செஞ்சவரு.. பாவம் அந்த ஆளு… விட்டுடுங்க! அண்ணாமலையை கலாய்த்த கர்நாடக துணை முதல்வர் appeared first on Dinakaran.