ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் வீடுகள், அலுவலகங்களில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் (ஐடி) சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியது. ஈரோடு அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் என்.ராமலிங்கம். தொழிலதிபர். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினரான இவருக்கு சொந்தமாக என்.ஆர்.கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர். இவர்களது கட்டுமான நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கட்டுமான ஒப்பந்தப்பணிகளை செய்து வருகின்றனர்.
ராமலிங்கத்தின் நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல்களின்பேரில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.ஆர்.கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ராமலிங்கம் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர்.திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கத்தின் நிறுவனத்துடன் வியாபார தொடர்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஆர்பிபி கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும், பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டையில் ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டார்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்து வரும் இந்த சோதனை நேற்றும் 4வது நாளாக தொடர்ந்தது. இந்த சோதனையின்போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிவாஜி அன்கோ என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் ஈரோடு அருகே திண்டல் வித்யா நகரை சேர்ந்த சிவா என்பவரது வீட்டிலும் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கும் ஏராளமான சொத்து ஆவணங்கள், ரொக்கம் ஆகியவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதேபோல், திருச்சியில் இருந்து கல்லணை சாலை செல்லும் டாக்டர் தோப்பு பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கம் பங்குதாராக உள்ள ‘ஜாஸ்கன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்’ (லித்தியம் டெக்னலாஜி) என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் குப்பைகளை அள்ளுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆட்டோக்களின் பேட்டரிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறது. சமீபத்தில், கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆட்டோ நிறுவனத்திடம் பேட்டரி கொள்முதல் ஆர்டரை இந்த நிறுவனம் வாங்கியதாக தெரிகிறது. இந்நிறுவனத்தில் சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் வந்தனர். தொடர்ந்து, தனியார் நிறுவனத்தில் காலை முதல் இருந்து சோதனையை துவங்கினர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று கூடுதலாக 2 பேர் வந்தனர். தனியார் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு அறை பகுதி உள்பட ஆவணங்களில் உள்ள விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.
The post எடப்பாடி உறவினரின் வீடு, ஆபீசில் 4வது நாளாக ரெய்டு: சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியது appeared first on Dinakaran.