ஈரோடு: ஈரோடு செட்டிபாளையம், முள்ளாம்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் வீடுகள், அலுவலகங்களில் 5ம் நாளாக நேற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஈரோடு அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் என்.ராமலிங்கம். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர். இவரது வீடு, அலுவலகங்கள், ஆர்பிபி கட்டுமான நிறுவனம், அதன் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று 5ம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த ஆவணங்களின் அடிப்படையில், ஈரோடு திண்டல், வித்யா நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் உறவினரான சிவாஜி அண்ட் கோ எனும் பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சிவா என்பவரது வீட்டிலும் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில்தான் அவை குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.
The post எடப்பாடி உறவினரின் வீடுகள், ஆபீசில் 5ம் நாளாக ஐடி ரெய்டு appeared first on Dinakaran.