பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 608 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தில் 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் தீப் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வானார். இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது போட்டி வரும் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.