திருவொற்றியூர்: எண்ணூர் காமராஜ் நகர் 1 மற்றும் 3வது தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு எண்ணூர் மின் வாரிய அலுவலகத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில் பல இடங்களில் மின் பெட்டிகள், உயர் அழுத்த மின் வயர்கள், மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக 1வது தெருவில் மின் பெட்டிக்கு செல்லும் உயர் மின் அழுத்த வயர் கடந்த 2 மாதங்களுக்கு முன், பெய்த கனமழையால் சேதமடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின் வாரிய உதவி பொறியாயாளருக்கு புகார் கொடுத்தனர்.
ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த மின் வயர் அழுத்தம் தாங்காமல் உருகி, அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும் பழுதடைந்த மின் வயரில் இருந்து, மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த வயர் பூமிக்கு மேலேயே இருப்பதால் இந்த தெரு வழியாக பொது மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதையடுத்து காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பழுதடைந்த வயரிலிருந்து மின் கசிவு ஏற்படாமல் இருக்க அதில் தற்காலிகமாக டேப் ஒட்டி வைத்துள்ளனர். எனவே மின் வாரிய உயர் அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, பழுதடைந்த மின் வயரை மாற்றி பாதுகாப்பாக பூமியில் புதைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எண்ணூர் காமராஜ் நகரில் பழுதடைந்த மின் வயரை சீரமைக்க வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால் மின் வயர் ஸ்டாக் இல்லை. வயர் வாங்கி கொடுக்க வேண்டும் அல்லது மின்வாரியத்திற்கு பணம் கட்டவேண்டும் அப்போது தான் மாற்றுவோம் என கூறுகின்றனர். இதனால் பல காலமாக பழுதடைந்த மின் வயர் மாற்ற முடியாமல் கிடப்பில் உள்ளது,’ என்றார். காமராஜ் நகர் 3வது தெரு முனையில் மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய் அமைக்க பெட்டியை நகர்த்தினர். அப்போது உயர் மின் அழுத்த வயரை சரியாக அமைக்காமல், அப்படியே விட்டு விட்டனர். தற்போது, உயர் மின் அழுத்த வயர், தெரு முனையில் வழியை மறித்த நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் இந்த தெரு வழியாக செல்லும் போது மின்வயரில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே இதை சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.
The post எண்ணூர் காமராஜ் நகரில் அச்சுறுத்தும் மின் வயர்கள்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.