ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இது ‘புறக்கணிப்பு’ அரசியல் எதிர்காலத்தில் திமுகவுக்கு சாதகமா, பாதகமா என்று அலசுவோம்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரது மறைவால் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது.