மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கவிஞர் வரவர ராவ், எழுத்தாளர் வெர்னான் கோன்சால்வ்ஸ், வழக்கறிஞர் அருண் பெரைரா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டதும், தொடர்ந்து அரசால் இந்த விஷயம் அணுகப்பட்டுவரும் விதமும் தொடர் அதிர்ச்சிகளைத் தருகிறது. தனக்கு எதிரான குரல்களை முடக்க அடக்குமுறையை ஓர் ஆயுதமாக அரசு கையாள்கிறதா என்ற கேள்வி உருவாவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஒரே ஆறுதல், உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை. “அவர்களைச் சிறையில் அடைக்கக் கூடாது, வேண்டுமானால் வீட்டுக் காவலில் விசாரியுங்கள்” என்று உத்தரவிட்டதுடன் அரசை நோக்கி ஆழமான கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
ஐந்து பேரும் நன்கு படித்தவர்கள், சமூகத்தின் உயர் நிலையில் இருப்பவர்கள், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகப் பாராட்டப்படுபவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், மலைவாசிகள் ஆகியோருக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள். “அப்படியென்றால், இவர்கள் தவறிழைக்க மாட்டார்களா, நடவடிக்கை கூடாதா என்று கேட்டால், யாருமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என்பதே பதில். ஆனால், முகாந்திரம் முக்கியமானது. இந்த விஷயத்திலோ இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்க்கையில், பீமா-கோரேகானில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சிறு போரை நினைவூகூர நடந்த நிகழ்ச்சியின் மேடைப் பேச்சுகளை, தேசத்துக்கு விரோதமானதாகவும், ஆயுதம் எடுத்துப் போர் செய்யச் சொன்னதாகவும் காவல் துறை திரிக்கப்பார்க்கிறதா என்ற கேள்வி எழுவது தவிர்க்கவே முடியாததாகிறது.
மாவோயிஸ்ட்டுகளுக்காக நிதி திரட்டியதாகவும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகவும், இதர சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் ஐந்து பேர் மீதும் குற்றம்சாட்டுகிறது புனே காவல் துறை. இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை ஆதாரங்களாக காவல் துறையால் முன்வைக்கப்பட்டவை வலுவானதாக இருந்தால் உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டியதில்லை. தேச துரோகம் – அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் இந்தப் பிரிவுகளின் கீழ் தொடுக்கப்படும் பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டதில்லை என்பதே இந்நாட்டின் வரலாறு. காலங்காலமாக இந்நாட்டில் அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் அது கையாளப்படுவதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருக்கிறதா என்பதை நீதிமன்ற விசாரணைகள் வெளிக்கொண்டுவரும் என்று நம்பலாம். எதிர்க்கட்சிகள் சொல்கிறபடி ஒருவேளை அரசுக்குப் பிடிக்காத கருத்துகளைப் பேசுகிறார்கள் என்ற காரணத்துக்காக அவர்களை அச்சுறுத்தவும், எதிர்த்துப் பேச யாருக்கும் துணிவு வரக்கூடாது என்று எச்சரிக்கவும்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் ஜனநாயகத்துக்கு அது நல்லதல்ல; அரசுக்கும் அது நல்லதல்ல!