சென்னை: எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் எவரையும் விசாரணையை எதிர்கொள்ள வற்புறுத்தக் கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆலந்தூர் சார் பதிவாளராக பணியாற்றியவர் ராஜு. இவர் நீர்நிலை பகுதியை ஒருவருக்கு பதிவு செய்ததாக கூறி கடந்த 2017ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இவருடன் நிலத்தை வாங்கியவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சார் பதிவாளர் காஞ்சிபுரம் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சார் பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலத்தின் வகை தொடர்பாக சந்தேகம் எழுந்ததால் கடந்த 2005ல் சார் பதிவாளர் அந்த நிலத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார். அதனால் சுமார் 7 ஆண்டுகள் அந்த நிலம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், நிலத்தை விற்பனை செய்தவர் பதிவுத்துறை ஐஜியிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பதிவு செய்ய உரிய உத்தரவு கிடைத்தது. அதன்பின்னரே நிலத்தை பதிவு உத்தரவிடப்பட்டது. இதற்காக எந்த லஞ்சமும் மனுதாரர் வாங்கவில்லை.
இந்த பத்திர பதிவில் முறைகேடு நடந்ததாக கூறி 12 ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை பரிசீலித்த ஜுடிசியல் மாஜிஸ்திரேட் சாட்சி விசாரணை தொடங்கியதால் மனுவை தள்ளுபடி செய்துள்ளார் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லாமல் ஒருவரை விசாரணையை எதிர் கொள்ள வற்புறுத்தக் கூடாது என்று கூறி காஞ்சிபுரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் எவரையும் விசாரணையை எதிர்கொள்ள வற்புறுத்தக் கூடாது appeared first on Dinakaran.