கோவை: “பாஜக மாநிலத் தலைவராக எனது இல்லத்துக்கு வெளியே நின்று, சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன். நாளையில் இருந்து திமுக ஆட்சியில் இருந்து அகற்றும்வரை, நான் செருப்பு அணியமாட்டேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “திமுக என்ற போர்வை இருந்ததால் மட்டும்தான், குற்றவாளி ஞானசேகரன், அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது ஆறறிவு இருக்கும் எந்த மனிதருக்கும்கூட தெரியும். திமுகவின் கட்சி பொறுப்பில் இருக்கும் அந்த நபர், அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும் காரணத்தால்தான் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்படவில்லை. ஏற்கெனவே இதே போன்றதொரு குற்றத்தை செய்த அந்த நபர் இரண்டாவது முறையும் அதேபோல ஒரு குற்றத்தை செய்திருக்கிறார்.