2012-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்ததில் இருந்து வீரராகவும் ஆலோசகராகவும் பயிற்றுனராகவும் பயிற்சியாளராகவும் டெல்லி அணியின் தூணாகச் செயல்பட்டு வருபவர் கெவின் பீட்டர்சன்.
“ஐபிஎல் கிரிக்கெட்டில் நான் சிறந்த வெற்றி கண்ட தருணம் விரேந்திர சேவாக் தலைமையில் ஆடும்போதுதான். அன்றிலிருந்து நான் வர்ணனையாளராக ஆனாலும் டெல்லியே என் அணி என்று முடிவெடுத்து விட்டேன்” என்று பெருமை பொங்க நினைவுகூர்கிறார் கெவின் பீட்டர்சன். 2012-ல் குரூப் ஸ்டேஜில் டாப் இடத்தை டெல்லி டேர்டெவில்ஸ் எட்டிய போது கெவின் பீட்டர்சன் தன் முதல் டி20 சதத்தை அடித்திருந்தார்.
டெல்லி அணியின் தேர்வுகளில் தலையிடாவிட்டாலும் டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டர்களைத் தயார் செய்வதில் கெவின் பீட்டர்சனின் பங்கு மிக மிக அதிகம். அபிஷேக் போரெல் என்ற பேட்டருக்கு ஷாட்களின் ரேஞ்ச்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அஷுதோஷ் சர்மா என்பவர் லக்னோவுக்கு எதிராக தனியாளாக நின்று 66 ரன்களில் டெல்லிக்கு வெற்றி பெற்றுத் தந்த போது அவரது குருநாதர் கெவின் பீட்டர்சனின் புகழ்பெற்ற ‘ஸ்விட்ச் ஹிட்’ ஷாட்டை ஆடி பீட்டர்சனை புளகாங்கிதப்படுத்தினார்.