எம் சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) பேசும்போது, ‘‘அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய உள்ளாட்சி அமைப்புகள் இருப்பது அவசியமாகும். எனவே, உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. இதனால் அத்திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பதில்லை. அதேபோல், எம் சான்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் குவாரிகள் டெண்டர் எடுத்தபோது குறிப்பிட்ட தொகையைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.