எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மத்திய அரசு செய்துகொள்ளாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (ஏபி-பிஎம்ஜேஏஒய்) திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது. மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இருந்தபோதிலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரமான சுகாதாரச் சேவை வழங்குவதில் எந்த சமரசத்தையும் மருத்துவமனைகள் செய்து கொள்வதில்லை. உலகத் தரத்தில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.