நெல்லை: எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளருமான நாறும்பூநாதன் (66) நேற்று காலமானார். நாறும்பூநாதன் 1960 ஆக.27ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பிறந்தார். தந்தை ராமகிருஷ்ணன் தமிழாசிரியர். மனைவி சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மகன் ராமகிருஷ்ணன் கனடாவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். நாறும்பூநாதன் முதுகலை கணிதம் படித்துள்ளார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றினார். நெல்லையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக புத்தக கண்காட்சிகளை நடத்தியதில் பெரும் பங்கு வகித்தவர். இவர் தமிழக அரசின் உ.வே.சா. விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு 15 நாட்களாக வீட்டில் ஓய்வில் இருந்த அவர் நேற்று காலை நடைபயிற்சிக்காக சென்றபோது மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நாளை (செவ்வாய்) நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, நெல்லை கலெக்டர் சுகுமார், முன்னாள் கலெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.