புதுடெல்லி: இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத் துறை டெல்லியில் கைது செய்துள்ளது. இந்த கைது பழிவாங்கும் நடவடிக்கை என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஃபைஸி கைது: கடந்த 2006 நவ.22-ல் உருவான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாக துவக்கப்பட்டதுதான் எஸ்டிபிஐ. இதன் தேசியத் தலைவரான ஃபைஸி மீது பணமோசடி புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று, கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தில் ஃபைஸி கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ‘பழிவாங்கும் அரசியல்’ என விமர்சித்துள்ளன.