மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னாஜி ராவ் ரோடு நியூ எக்ஸ்டென்ஷன் 1வது வீதியை சேர்ந்தவர் ராஜீக் (35). எஸ்டிபிஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். சிறுமுகை சாலையில் பழைய இரும்புக்கடை வைத்து உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பேரில் நேற்று காலை 10 மணிக்கு பெண் அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறையினர் ராஜீக் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், எஸ்டிபிஐ கட்சியினரை குறிவைத்து அமலாக்கத்துறையினரை வைத்து மிரட்டுவதாக கூறியும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னாஜி ராவ் ரோடு நியூ எக்ஸ்டென்ஷன் 2வது வீதியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சி உறுப்பினரும்,இரும்புக்கடை அதிபருமான வாஹித்தூர் ரகுமான் (35) என்பவரது வீட்டிலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ரீலா (35) என்பவருக்கு சொந்தமான பழக்கடையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின் வாஹித்தூர் ரகுமானை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மொத்தம் 3 இடங்களில் சுமார் 10 மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
The post எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, கடையில் ஈ.டி ரெய்டு: இரும்புக்கடை அதிபர் கைது appeared first on Dinakaran.