சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடக்கிறது. வேளாண்மை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் வரும் 24ம் தேதி முதல் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை சிறப்பாக எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். இன்று வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
வருகிற திங்கட்கிழமை முதல் 5 நாட்கள் நிதி நிலை அறிக்கையின் மீது பொது விவாதமும், பதிலுரையும் இருக்கும். அதன் தொடர்ச்சியாக 24ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை 24 நாட்கள் மானியக்கோரிக்கையின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இன்று தவிர எல்லா நாட்களும் கேள்வி நேரம் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருக்கும் இடம் நல்ல இடம் தான். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அவர்கள் 2 கேள்விகள் கேட்டாங்க.
ஒன்னு முதல் வரிசை அல்லது நாங்க எல்லாம் சேர்ந்து இருக்கின்ற மாதிரி இருக்க வேண்டும் என்று. அவர்கள் எல்லாம் விருப்பமான இடம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சட்டசபையில் தான இருக்கிறார்கள். யாருக்கு எந்த இடம் என்பதை முதல்வராக இருந்த அவங்க ஏற்றுக்கொள்வார்கள். ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு அவங்க எல்லாரும் அவைக்கு வந்தது ரொம்ப சந்தோஷம். அதிமுகவினர் சபாநாயகர் மீது (என் மீது) அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என்றும், அதே போல பேசுவதை டிவியில் காட்டவில்லை என்றும் சொன்னார்கள்.
இது குறித்து ஏற்கனவே சட்டசபையில் பதில் சொல்லி விட்டோம். 22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை. 24ம்தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது. அதன்படி 24ம் தேதி நீர்வளத்துறை, இயற்கை, வளங்கள், 25ம் தேதி நகராட்சி நிர்வாகம், 26-ந்தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. 27ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை. 28ம் தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள்.
வனம், கைத்தறி மற்றும் துணி நூல். ஏப்ரல் 1ம்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 2ம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 4ம் தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை. 7ம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 8ம் தேதி கூட்டுறவு, உணவு, 9ம் தேதி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, 15ம் தேதி செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத்துறை.
16ம் தேதி மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 17ம் தேதி சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை. 21ம் தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, 22ம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 23ம் தேதி வணிக வரிகள், பத்திரப்பதிவு, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்து. 24ம் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, 25ம் தேதி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, 26ம் தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
28ம் தேதி பொதுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், 29ம்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30ம் தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்-அமைச்சரின் பதிலுரை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சட்டசப்பேரவை கூட்டம் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், பதிலுரை மற்றும் மானியக்கோரிக்கை மீதான விவாதம் என 29 நாட்கள் நடக்க உள்ளது. இதில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் மட்டும் 24 நாட்கள் நடக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாகும். 31ம் தேதி (ரம்ஜான்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டு, சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
* குறுகிய நோக்கத்தோடு அரசு செயல்படவில்லை…
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல முறை நான் சொன்னேன். வினாக்கள் விடை நேரம், முதல்வர், அமைச்சர்கள் சொல்லுகின்ற பதில் மற்றும் அவங்க கொண்டுவருவது எல்லாமே நேரடியாக ஒளிபரப்பு தான் செய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றத்தில் அவ்வளவு சேனல்களும், நிருபர்களும் இருக்கின்றார்கள். இதில் எந்தவித பிரச்னையும் இல்லை. யாரும் பேசுறதையும் காட்டக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தோடு, எண்ணத்தோடு இந்த அரசு செயல்படவில்லை. நாங்களும் செயல்படவில்லை. நாங்கள் பேசுறதை காட்டவில்லை என்று சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இந்த 2 கோரிக்கையை வைத்து தான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதை பார்த்து கொள்ளலாம். சட்டமன்றத்தில் இது புதுசு இல்லையே. பல சந்தர்ப்பங்களில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது தான். அதை சபையில் முடிவு பண்ணுவாங்க.
The post ஏப்ரல் 30ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்: மானியக்கோரிக்கை மீதான விவாதம் 24ம் தேதி முதல் தொடக்கம்; சபாநாயகர் அப்பாவு பேட்டி appeared first on Dinakaran.