செய்யாறு: செய்யாறு அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி நள்ளிரவு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் தண்ணீரில் மிதந்தது. டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் கோயில் ஆயக்கரை தெருவை சேர்ந்தவர் நீலகண்டன்(58). இவர் செங்கல்பட்டு அடுத்த படாளம் பகுதியில் உள்ள காஸ் கம்பெனியில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கம்பெனியில் இருந்து 357 சமையல் காஸ் சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு குடியாத்தம் நோக்கி சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் செய்யாறு-ஆற்காடு சாலை மோரணம் ஏரிக்கரை வளைவில் வந்தபோது திடீரென
கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதியது. பின்னர் ஏரிக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் சிதறி தண்ணீரில் மிதந்தது. மேலும் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் நீலகண்டன் லேசான காயம் அடைந்தார். விபத்தை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் மோரணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், இடிபாட்டில் சிக்கி தவித்த டிரைவர் நீலகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காஸ் சிலிண்டர்களை மீட்டனர். லாரியும் மீட்கப்பட்டது.
The post ஏரியில் லாரி கவிழ்ந்தது: தண்ணீரில் மிதந்த சமையல் காஸ் சிலிண்டர்கள் appeared first on Dinakaran.