வாஷிங்டன்: ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானதில் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் தீவிர விசாரணை நடத்தி, சமீபத்தில் முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, சில சர்வதேச ஊடகங்கள், அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, விமானத்தின் ‘காக்பிட்’ குரல் பதிவுக் கருவியில் பதிவான உரையாடல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டன.
அதில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கேப்டன் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை அணைத்திருக்கலாம் என்றும், இதனால் விமானி அறையில் குழப்பமும், பீதியும் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி, விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது. சர்வதேச ஊடகங்களின் இந்த ஆதாரமற்ற செய்திக்கு அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் ஜெனிபர் ஹோமெண்டி வெளியிட்ட அறிக்கையில், ‘ஏர் இந்தியா விமான விபத்து குறித்த வெளியாகும் சர்வதேச ஊடக செய்திகள் யூகத்தின் அடிப்படையிலானவை. இந்தியா தரப்பில் முதற்கட்ட அறிக்கையை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதிகாரப்பூர்வ இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோல், இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தவறான செய்திகளை வெளியிட்டு, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம். முதற்கட்ட அறிக்கையில் என்ன நடந்தது என்பதை மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஏன் விபத்து நடந்தது என்ற மூல காரணங்கள் மற்றும் பரிந்துரைகள் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இறுதி அறிக்கையில் வெளியிடப்படும். அதுவரை பொறுமை காக்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
The post ஏர் இந்தியா விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் appeared first on Dinakaran.