*நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
ஏலகிரி : ஏலகிரி மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவில் திடீரென சாய்ந்த முள்மரத்தை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றினர்.ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள மலைப்பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த பாதையில் பல்வேறு மூலிகை செடிகள், ஏராளமான மரங்கள் உள்ளன.
இந்நிலையில், மழைக்காலங்களில் ஏலகிரி மலைப்பாதையில் உள்ள மரங்கள் சாய்வதும், பாறைகள் உருண்டு சாலையில் விழுவதும் வாடிக்கையாக உள்ளது. அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஏலகிரி மலைப்பாதையில் உள்ள 6வது கொண்டை ஊசி வளைவில் திடீரென ராட்சத முள்மரம் சாய்ந்து விழுந்தது.
இதனால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி உத்தரவின்பேரில், உதவி கோட்ட பொறியாளர் ஆதவன் ஆலோசனையின்படி உதவி பொறியாளர் நித்தியானந்தம் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மலைப்பாதை வழியாக போக்குவரத்து சீரடைந்தது. அப்போது, சாலை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
The post ஏலகிரி மலைப்பாதையில் சாய்ந்த மரம் அகற்றம் appeared first on Dinakaran.