ஆக்ரா: மும்பை நாக்படா பகுதியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான ஒரு கடையை வருமான வரித்துறை கடந்த 2001 செப்டம்பரில் ஏலத்தில் விட்டது. ஜெயராய் பாய் தெருவில் 144 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்தக் கடையை உ.பி.யின் ஆக்ராவை சேர்ந்த ஹேமந்த் ஜெயின் என்பவர் வாங்கினார். தற்போது 57 வயதாகும் இவர் 23 ஆண்டுகளுக்கு முன் தனது 34-வது வயதில் ரூ.2 லட்சம் செலுத்தி இந்தக் கடையை வாங்கினார்.
தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துகளை யாரும் வாங்க முன்வருவதில்லை என்ற செய்தியின் அடிப்படையில் ஹேமந்த் ஜெயின் துணிந்து, அந்தக் கடையை வாங்கினார். என்றாலும் அவரது மகிழச்சி நீடிக்கவில்லை. இந்தக் கடையை தனது பெயருக்கு மாற்ற அவர் நீண்ட போராட்டதை நடத்த வேண்டியிருந்தது.