சென்னை: “வருமான வரியை எளிமைப்படுத்தும் விதமாக, புதிய வருமான வரிச் சட்டம் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதேபோன்று, நாட்டின் வருவாய் அதிகரித்து, நிதிப் பற்றாக்குறை குறைந்து வருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை, அனைத்து மக்களுக்குமான நிதிநிலை அறிக்கையாக, குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் அறிக்கையாக விளங்குகிறது.