நியூயார்க்: `உக்ரைனில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போன்று செயல்படும் ரஷ்ய ராணுவத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இல்லை என்றால், ஐநா சபையை கலைத்து விடுங்கள்,’ என்று ஐநா சபையில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆவேசமாக பேசினார். உக்ரைனில் ரஷ்ய படைகள் பின்வாங்கிய புச்சா நகரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டு சடலங்கள் வீசப்பட்ட கொடூர காட்சிகள் வெளியானது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் ஐநா பாதுகாப்பு சபையில் நேற்று உரையாற்றினார். அப்போது, `உக்ரைனை அடிமை நாடாக மாற்ற ரஷ்யா விரும்புகிறது. ரஷ்ய படைகளின் ராணுவ நடவடிக்கைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை போல் உள்ளது. எனவே, உடனடியாக விரைந்து செயல்படுங்கள். இல்லை என்றால், ஐநா சபையை கலைத்து விடுங்கள். அனைத்து நாடுகளுக்கும் நியாயம் வழங்கும் வகையில் ஐநா சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்,’ என்று கூறினார்.
ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ், “உக்ரைனில் நடக்கும் போர் சர்வதேச ஒழுங்கிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அதன் விளைவுகளால் மிகப் பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். உக்ரைனில் நடக்கும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,’’ என்றார். ஏற்கனவே, பல்வேறு பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யா, புதிய தடைகள் காரணமாக மேலும் பாதிக்கப்படக் கூடும் என கருதப்படுகிறது.
ரஷ்ய தூதரகம் மீது மோதி எரிந்த கார்: ருமேனியா நாட்டின் தலைநகர் புச்சாரெஸ்ட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயிலில் இருந்த கேட்டின் மீது நேற்று காலை கார் ஒன்று மோதியது. இதில் கார் தீப்பற்றி எரிந்ததில் ஓட்டுனர் தீயில் கருகி உயிரிழந்தார். இது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.