வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 2015ம் ஆண்டு மலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, 10 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சதுரகிரி கோயிலுக்கு தினந்தோறும் செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தினந்தோறும் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கியது.
இதுகுறித்து விருதுநகர் கலெக்டர் (பொ) டிஆர்ஓ ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனைச்சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் மாலை 4 மணிக்குள் திரும்பிவர வேண்டும். உரிய அனுமதியின்றி மலையில் தங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது. மலையேற்ற பாதைகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும், வனத்துறை சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீதிமன்ற வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சதுரகிரி மலைக்கோயில் நுழைவாயில் கேட் நேற்று வனத்துறையால் திறக்கப்பட்டது. இன்று முதல் வழக்கம்போல் பக்தர்கள் தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி; சதுரகிரி கோயிலில் தினமும் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.