ஐபிஎல் டி20 லீக் மற்ற தனியார் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களை விட தரத்தில் மட்டரகமாக உள்ளது. வெறும் பேட்டிங் தான் பிரதானம், பவுலர்களை அழிக்கும் இத்தகைய தொடர்கள் மிகவும் ஒரு தலைபட்சமாகப் போய் சுவாரஸ்யத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதில் தான் முடியும். இந்நிலையில், யாரும் இதுவரை கண்டு கொள்ளாத ஒரு பகுதியான ‘ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்ச்சிகளின்’ கேலிக்கூத்து சமாச்சாரங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் நுட்பமான கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக தன் யூடியூப் சேனலில் கூறியதாவது: ஐபிஎல் பரிசளிப்பு நிகழ்ச்சியில் குறைந்தது 10 பரிசுகளையாவது வழங்குகின்றனர். இரு அணிகளிலும் 50 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு பரிசளிக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், ஒரு பவுலர் நன்றாக வீசினாலோ, ஒரு நல்ல ஓவரை வீசினாலோ, அவர்களுக்கு ஒரு விருது கூட கிடைப்பதில்லை.