திருச்சி: “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அஞ்சலி செலுத்திய பின்னர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பத்தாண்டுக் காலம் இந்தியாவின் பிரதமராக இருந்து உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி வந்தபோது அந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்திய நாட்டை மீட்டு தாராள பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தினார்.