ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், ஓடுபாதையில் குறுக்கே வந்தவர்களை தூக்கி வீசிவிட்டு காளைகள் சீறிப்பாய்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நேற்று எருது விடும் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதற்காக, காளைகள் ஓடுவதற்கு இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் வேலூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும், 180க்கும் மேற்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் தங்களின் காளைகளை அதிகாலையிலேயே கொண்டு வந்தனர். விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டிருந்தனர். பின்னர், காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய கவுன்சிலர் குமார், வருவாய்த் துறையினர், போலீசார் மற்றும் விழாக்குழுவினர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விட்டதும், அவை குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஓடுபாதையில் திரண்டிருந்த இளைஞர்களின் கூட்டத்தை சிதறடித்து புழுதி பறக்க சீறிப்பாய்ந்து ஓடியது. ஓடுபாதையில் குறுக்கே வந்தவர்களை காளைகள் தூக்கி வீசி பந்தாடி பறக்கவிட்டன. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
அவர்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையொட்டி டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில், இன்ஸ்பெக்டர் புனிதா மேற்பார்வையில் சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், குறைந்த இலக்கை அடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.80 ஆயிரம், 2வது பரிசு ரூ.70 ஆயிரம், 3வது பரிசு ரூ.60 ஆயிரம் என மொத்தம் 65 பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
The post ஒடுகத்தூர் அருகே எருது விடும் விழாவில் ஓடுபாதையில் குறுக்கே வந்தவர்களை தூக்கி வீசி சீறிப்பாய்ந்த காளைகள்: 10 பேர் காயமடைந்தனர் appeared first on Dinakaran.