டெல்லி: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவர் திருச்சி சிவா அவர்களுடன் இணைந்து இன்று (28.11.2024) ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை புது தில்லியில் சந்தித்தார்கள்.
இச்சந்திப்பின் போது தமிழ்நாடு சுற்றுலாத் துறை தொடர்பான கோரிக்கை மனுவினை வழங்கினார். கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவிகளை விரைவாக வழங்கிட கோரிக்கை விடுத்தார்கள்.
ஸ்வதேஷ் தர்ஷன் (2.0);
1) சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான ரூபாய் 30.02 கோடிகள்
2) நீலகிரி மாவட்டம் இயற்கை சுற்றுலா தலம் பைக்கராவில் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்திடும், திட்டத்திற்கு ரூபாய் 28.3 கோடி ஒதுக்கீடு.
சிறப்பு நிதியுதவி (Special Assistance for State Capital Investment);
1. மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 99 கோடி ஒதுக்கீடு.
2. உதகமண்டலம் தேவலாவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பூந்தோட்டம் அமைத்திட ரூ.72.58 கோடிகள்.
3. ராமேஸ்வரத்தினை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.99 கோடி.
பிரசாத் திட்டம்;
1. தமிழ்நாட்டில் அமையப்பட்டுள்ள எட்டு நவகிரக கோவில்களில் பிரசாத் திட்டத்தின் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.44.95 கோடி.
2. சுற்றுலா மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு 16 வது நிதிக்குழுவில் சுற்றுலா தலங்களில் உள்ள மராட்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் பாளையக்காரர்கள் எழுப்பிய பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்தல், புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.3000 கோடியினை மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சியினை மேம்படுத்த ரூ.1200 கோடியினை வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு ஒன்றிய அமைச்சர் அவர்கள் தலையிட்டு தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை 16வது நிதிக் குழு மூலம் வழங்க உரிய அழுத்தத்தை தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இச்சந்திப்பின் போது தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் தமிழ்நாட்டில் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை உருவாக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்து கோரப்பட்டுள்ள அனைத்து நிதி உதவிகளையும் விரைவில் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.
இச்சந்திப்பின் போது தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பி. சந்திரமோகன் மற்றும் சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.
The post ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை தொடர்பான கோரிக்கை மனுவினை வழங்கினார் அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.