சென்னை: ஒன்றிய அரசின் கைப்பாவையாக யுஜிசி செயல்படுவதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;
யுஜிசியின் புதிய வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு: அமைச்சர் கோவி.செழியன்
மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் யுஜிசியின் புதிய விதிமுறைகள் உள்ளன. யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும். யுஜிசியின் புதிய விதிமுறைகள் தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் பரவுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வியில் முழு உரிமை உள்ளது.
“பல்கலைக் கழகங்களை கைப்பற்ற ஒன்றிய அரசு முயற்சி”: அமைச்சர்
மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற ஒன்றிய அரசு முயற்சி
துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி தலையிடுவதாக அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கல்வியாளர்களாக அல்லாதவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கும் புதிய விதிகள் தவறான நடைமுறை என கூறியுள்ளார்.
மாநில உரிமைகளை பறிக்கும் செயல்: அமைச்சர்
தொடர்ந்து கல்வி பணி ஆற்றுபவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும். யுஜிசியின் புதிய விதிமுறைகள் உயர்கல்வியில் இடைநிற்றலை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரு பட்டப் படிப்புகளை படிக்கலாம் என்பது முழுமையான கல்வி அறிவை பெற உதவாது. இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களில் உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி கற்போர் விகிதம் 28%ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 48%ஆக உள்ளது.
தமிழ்நாடு அரசு பின்வாங்காது: அமைச்சர் கோவி.செழியன்
தமிழ்நாட்டை பின்பற்றி கேரளா, தெலுங்கானா அரசுகளும் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை தமிழ்நாடு அரசு போராடும். ஒன்றிய அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். மேலும், கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு மீண்டும் படிக்கலாம் என்ற திட்டம் இடைநிற்றலை அதிகரிக்கும்.
“மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பை பதிவு செய்க”: அமைச்சர் கோவி.செழியன்
யுஜிசியின் புதிய விதிகள் தொடர்பாக பிப்.5க்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். யுஜிசியின் புதிய வரைவுக் கொள்கைக்கு எதிர்ப்பை இ-மெயில் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டும். அடிப்படைக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒன்றிய அரசு பல்வேறு இடர்பாடுகளைச் செய்து வருகிறது. துணைவேந்தர் நியமனத்தில் முட்டுக்கட்டை போடுவது யாரென்று அனைவருக்கும் தெரியும். யுஜிசியின் புதிய விதிகளை எதிர்க்கக் கோரி 9 மாநிலங்களின் முதல்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அரசின் கைப்பாவையாக யுஜிசி செயல்படுகிறது; மாநில உரிமைகளை பறிக்கும் செயல்: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு!! appeared first on Dinakaran.