கோவை: கோவை வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டு காலமாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை சொல்லி கடந்த மூன்று ஆண்டு காலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் முதல்வர் ஸ்டாலின். தற்போது மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கருத்தை பதிவு செய்து இருக்கிறார். மூன்று ஆண்டுகாலம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தால் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை பெற்று இருக்கலாம்.
புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்து இருக்கலாம். மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம்.நீலகிரி மாவட்டத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறார்கள், கனமழை பெய்யும் என தெரிவித்து இருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும், தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி, திட்டங்களில் ஒன்றிய அரசின் பாரபட்சம் குறித்து அறிக்கை, பேட்டி அளித்து எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இப்போது மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைத்தபிறகு, ஒன்றிய அரசுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.
The post ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு எடப்பாடி திடீர் வக்காலத்து appeared first on Dinakaran.