* துரத்தும் இலங்கை கடற்படை
* படகுகளை இழக்கும் மீனவர்கள்
மண்டபம் : ஒன்றிய அரசின் மெத்தன போக்கால் நடுக்கடலில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் தொடர்ந்து நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் மட்டும் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன், புதுக்கோட்டை உள்பட தமிழக கடலோரப்பகுதியை சேர்ந்த மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்து, இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அப்படி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் படகுகள் ஒவ்வொன்றும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மதிப்பிடு ஆகும்.
இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரமான இந்த படகுகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பறிமுதல் ெசய்து, தமிழக மீனவர்களிடம் திரும்ப வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக மீனவரின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிவை ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
மேலும் இலங்கை அரசிடம் இணக்கமான ஒரு உறவையும் ஏற்படுத்திக் கொண்டு,மீனவர்களின் அந்நிய செலவாணி முதலீட்டில் இருந்து வரும் பல கோடி ரூபாய் வர்த்தக ரீதியான நிதிகளை இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வருகிறது.
இந்த நிகழ்வுகள் மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனை அளிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கிடாக மீனவர்களின் பங்கீடு உள்ளன. ஆனால் இலங்கை கடற்படையால் அழிந்து வரும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒன்றிய அரசு தவற விட்டு தூங்கிக் கொண்டு வருகிறது என தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
இந்திய,இலங்கை சர்வதேச கடலோரப் பகுதியில் கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பது அராஜக போக்காக தெரிகிறது. இந்த நிகழ்வுகளை மண்டபம் மீனவர்கள், இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கின்றனர். மீனவர்கள் என்ன செய்தார்கள். எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தால், எல்லை தெரியாமல் வந்துள்ளனர்.
மீனவர்கள் தேச துரோகிகள் அல்ல, கடத்தல்காரர்களும் அல்ல. மீன்களை பிடிக்க தான் வந்துள்ளனர். கைது செய்து சிறையில் அடைப்பது மிகவும் ஒரு கண்டிக்கத்தக்க குற்றமாகும். மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடலோரப் பகுதிக்கு வந்தால், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு 60 நாட்கள் சிறையில் அடைத்து அவர்களை சித்தரவதை செய்வது, அபராதம் விதிப்பது உட்பட பல நிகழ்வுகளை இலங்கை அரசு செய்து வருகிறது. இந்த நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்காக ஒன்றிய அரசு அமைதியாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.
இலங்கை அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மீனவர்களை கைது செய்யும், சிறையில் வைத்து ஒரு மாதம், இரண்டு மாதத்திற்கு பின்பு மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, படகுகளை நீதிமன்ற பாதுகாப்பில் வைத்திருந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு, ஒன்றிய அரசு சேர்ந்து மீனவரின் படகுகளை மீட்டுத் தந்த காலங்களும் உள்ளது.
அதன் பின்னர் இலங்கை அரசு மீனவர்களை விடுதலை செய்து படகுகளை அரசுடைமை ஆக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க தொடங்கியது. சமீப காலமாக கடந்த 2023 ஆண்டுக்குப் பின்பு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து 60 நாட்களுக்கு பின்பு விடுதலையாக்குகின்றனர். மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்ய தொடங்கினார்கள்.
அதன் பின்னர் மீனவர்களுக்கு அபராதம் விதிக்க துவங்கி உள்ளனர். இந்திய பணத்திற்கு ரூ.17 ஆயிரம் முதல் அபராத தொகை விதிக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் இலங்கை நீதிமன்றம் 21ம் தேதி வரை பாம்பன் மீனவர்களுக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளது.
அதுபோல முன்னதாக விடுவிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு நீதிமன்றம் அபராதத்தை விதித்து, சிறை தண்டனையும் விதிக்கிறது. அபராத பணம் கட்டவில்லையென்றால் கூடுதல் நாட்கள் சிறைத்தண்டனை என உத்தரவிட்டு அனுப்பும்.ஆனால் நேற்று பாம்பன் பகுதி மீனவர்களுக்கு அபராதத் தொகையை கட்டினால் மட்டுமே விடுதலை. இல்லையென்றால் சிறை தண்டனை என்ற புதிய உத்தரவை கையாண்டு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுமீனவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியாவிற்கு பொருளாதார சீரழிவு ஏற்படும். அதனால் தூங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு கண் விழித்து தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை அரசுடமையாக்கும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு தமிழக அரசு நிதி வழங்குவது போல், ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும். அதுபோல தமிழக மீனவர்களின் வாழ்வாதார அழிவை பற்றி சிந்திக்காமல் ஒன்றிய அரசு தூக்கி கொண்டிருக்கிறது.
பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தின் குழந்தைகளுக்கு, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படகுக்கு ரூ.30 லட்சம் இழப்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை அரசு திரும்ப வழங்காமல், அரசுடைமை ஆக்கி விடுகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சத்திற்கும் இழப்பீடு நேரிடும்.
அதுபோல அந்த மீனவ குடும்பங்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலை செய்ய முடியாமல் தவித்து விடுவார்கள். பாதிக்கப்படும் மீனவ குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் கல்வியை நிறுத்தி விடுவார்கள்.
சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள். அதனால் மீனவ சமுதாயத்தில் கல்வி அறிவு இல்லாத குடும்பங்களாக குறிப்பிட்ட நாட்களில் மாறும் சூழ்நிலை ஏற்படும். ஆதலால் இலங்கை அரசுடமையாக்கும் தமிழக விசைப்படகு, நாட்டு படகுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.8 லட்சத்தை கூடுதலாக 2 லட்சம் சேர்த்து ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும். அதுபோல பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தை மேம்படுத்தும் விதமாக மீனவ குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஒன்றிய அரசு மெத்தனப் போக்கால் அழிந்து வரும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் appeared first on Dinakaran.