சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் இந்த ஆண்டு (2025) புனித ஹஜ் கடமையாற்ற, சவுதி அரசாங்கம் 52,000 இந்தியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதற்காக, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000 ஹாஜிகள், பல்வேறு தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களின் மூலமாக தலா 6 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்தனர். தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள், ஹாஜிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை மற்றும் சவுதி அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக அனுப்பியிருந்தன.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட மண்டலங்களை ரத்து செய்து, அவற்றை மற்ற நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் விளைவாக, 52,000 இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் ஹஜ் யாத்திரையை கேள்விக்குறியாக்கியுள்ளது.ஆகவே, ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசும் இந்தப் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி, யாத்ரீகர்களுக்கு உதவ வேண்டும்.
The post ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அலட்சியத்தால் 52,000 இந்தியர்களின் ஹஜ் யாத்திரை கேள்விக்குறி: எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் appeared first on Dinakaran.