துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அரை இறுதி ஆட்டத்தில் 84 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 747 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 2 இடங்களை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷுப்மன் கில் 791 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். விராட் கோலிக்கும், கில்லுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 44 ஆக உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் ஹன்ரிச் கிளாசன் ஒரு இடம் முன்னேறி 760 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் அஸம் 770 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறார்.