மிர்பூர்: மிர்பூரில் நேற்று நடைபெற்ற மேஇ தீவுகள் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று மே.இ.தீவுகள் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இரு அணிகளுமே முழு நேர ஆட்டத்தில் 213 ரன்களில் முடிய சூப்பர் ஓவருக்குச் சென்ற ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 10 ரன்களை எடுக்க வங்கதேசம் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்று தோல்வி கண்டது.
இந்த ஒருநாள் போட்டியின் வரலாற்று சிறப்பு என்னவெனில், ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மொத்தம் 100 ஓவர்களில் இரு அணிகளும் 92 ஓவர்கள் ஸ்பின் பந்து வீச்சின் மூலம் வீசியதே. இதுவரை இத்தனை ஸ்பின் ஆதிக்கம் இருந்ததில்லை. அதிலும் கூடுதல் சிறப்பு என்னவெனில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற அணி. ஆனால், நேற்று தன் முழு கோட்டாவான 50 ஓவர்களையும் ஸ்பின் பவுலிங்கை வைத்தே வீசியதுதான். இதுவும் ஒரு புதிய வரலாறாகவே கிரிக்கெட் உலகில் நேற்று நிகழ்ந்துள்ளது.