துபாய்: ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி மதிப்பீட்டு புள்ளிகளை 122 முதல் 124 ஆக உயர்த்தியுள்ளது.