சென்னை மற்றும் சேலத்தில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹெச்எம்பிவி எனும் வைரஸ் பரவி வருகிறது என்று சொல்லப்படும் முன்பே, சுகாதாரத் துறையின் உயர் அலுவலர்கள் உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். கரோனா பெருந்தொற்று, மன்கிபாக்ஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் அனைத்து பன்னாட்டு விமான நிறுவனங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.