ரோம்: போப் பிரான்சிஸ் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவர் ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போப் பிரான்சிஸ்(88) கடந்த வாரம் சிக்கலான சுவாச பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவருக்கு நிமோனியா பாதிப்பு மற்றும் சுவாச தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் ஒருவாரம் ஆன நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் மாலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போப்பின் ஒட்டுமொத்த உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது இதயம் நன்றாக செயல்படுகின்றது. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் செயல்படுகின்றதா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும். இதுபோன்ற நோயாளிகள் நிமோனியாவில் இருந்து மீண்டு வருவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் வரை ஆகலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை தகவலின்படி , போப் பிரான்சிஸ் இரவு முழுவதும் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், காலை எழுந்து வழக்கம்போல் அவரது உணவை உட்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப்பிற்கு பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற உயிரினங்கள் தொடர்பான சிக்கலான சுவாச தொற்று மற்றும் நுரையீரல்களில் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவரது முழுமையான ஓய்வுக்கு பரிந்துரை செய்தனர். இதனிடையே மீண்டு வரமுடியாத அளவிற்கு போப் பிரான்சிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு, தனது பணியை தொடர முடியாமல் போனால் அவர் ராஜினாமா செய்யலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கு சில கர்தினால்கள் அனைத்தும் சாத்தியம் தான் என்று தெரிவித்துள்ளனர்.
The post ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை போப் பிரான்சிஸ் பதவி விலகல்? appeared first on Dinakaran.