புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், கொள்கை முடக்கத்தைத் தடுக்கும், வளங்கள் திசை திருப்பப்படுவதையும் நிதிச் சுமையையும் குறைக்கும்” என்று குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.
நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய குடியரசு தின உரையின் முழு வடிவம்: “வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26 அன்று, நமது அடிப்படை ஆவணமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டு விவாதங்களுக்குப் பின், 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அந்த நாள், நவம்பர் 26, 2015 முதல், சம்விதான் திவஸ், அதாவது அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.