காட்டாங்கொளத்தூர்: “வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கடி தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இடையூறாக உள்ளன. 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்களவைத் தேர்தலை நடத்த 25 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இது ஒரே தேர்தலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் 12 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும்,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இன்று (ஏப்.5) ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். எஸ். ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரிவேந்தர், பாஜக சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தி, தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.