திருவள்ளூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா பூந்தமல்லியில் நடைபெற்றது. இதற்கு மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் விமல் ஆனந்த், மாவட்ட தலைவர் வி.தணிகாசலம், மாவட்ட நிர்வாகிகள் ராமானுஜம், கபிலன், கேசவன், அன்பு, ஆசை தம்பி, ஞானசேகர், ஜெரோத் கிங்ஸ்லி, வெங்கடேசன், அழகிரி முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர்கள் ஆவடி சா.மு.நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அத்துடன் மாநிலத்திலேயே முதல் முறையாக 12ம் வகுப்பு பொது தேர்வை கணினி மூலம் எழுதுகின்ற மாணவன் ஆனந்தனுக்கு லேப்டாப்பையும் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது;
எங்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்குகிறவர்கள் மகளிர்தான். உங்களின் பார்வை 2021ல் இருந்து இங்குதான் உள்ளது. கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்யும் முதல் கையெழுத்திட்டார் முதல்வர். மகளிர் உரிமைத்தொகையை நாம் வழங்குவதைப் பார்த்து மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. அதுதான் இந்த திட்டத்தின் வெற்றி. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு முக்கிய காரணம் கலைஞரும் மு.க.ஸ்டாலினும் தான். மார்ச் 8 மட்டும் மகளிர் தினம் கொண்டாடவில்லை.
ஒவ்வொரு நாளும் மகளிர் தினத்தை கொண்டாட கூடிய அரசு திராவிட மாடல் அரசு. பெண்கள் ஆதரவு யார் பக்கம் உள்ளதோ அவர்கள்தான் தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருப்பார்கள் என்று நன்கு அறிந்தவர் முதல்வர். நாட்டின் உரிமையை பறிப்பது யாராக இருந்தாலும் 2021 ல் என்ன பதிலடி கொடுத்தார்களோ அதேபோன்று தமிழக முதலமைச்சர் 2026 ல் மீண்டும் முதலமைச்சராகி 200 தொகுதிக்கு மேல் வெல்வார். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தரன், ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ், நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் இரா.தரன், மாவட்ட பிரதிநிதி லயன் ஜெ.சுதாகர் கலந்து கொண்டனர்.
The post ஒவ்வொரு நாளும் மகளிர் தினத்தை கொண்டாடும் அரசு திராவிட மாடல் அரசு; அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.