சென்னை: “தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன. எனவே, சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதோடு, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், 4 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு, கயவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.