ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை மருத்துவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதனால், ஒவ்வொரு மூத்த ஓய்வுபெற்ற மருத்துவருக்கும் ஓய்வூதியத்தில் மாதம்தோறும் ரூ. 20 ஆயிரம் குறையும். இதனால் நூற்றுக்கணக்கான மூத்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி உள்ளனர். அவர்களுக்கு மிகுந்த சிரமத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துவதாக அரசின் இந்த உத்தரவு உள்ளது.