தேர்தல் நெருங்குவதாலோ என்னவோ மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு கச்சத்தீவு விவகாரம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கதை ஒருபக்கமிருக்க… கச்சத்தீவை மீட்டுவிட்டால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பிரச்சினையும் ஒரே இரவில் முடிவுக்கு வந்துவிடும் என்பது போல் அனைத்துக் கட்சிகளும் பேசுகின்றன. ஆனால், கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களுக்கு விடியலைத் தராது என்பதே கள யதார்த்தம் என்கிறார்கள்.
1974-ம் ஆண்டு ஜூன் 26-ல் போடப்பட்ட முதல் ஒப்பந்தத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவில், ‘இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லை கட்டுப்பாடுகள் இன்றி இரண்டு நாட்டு கடற் பிராந்தியத்துக்குள்ளும் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள்’ என்ற ஷரத்தும் சேர்க்கப்பட்டது. அதேசமயம் 1976 மார்ச் 23-ல் கையெழுத்தான இரண்டாவது ஒப்பந்தத்தில், இரண்டு நாடுகளுக்குமான கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டதுடன் ‘இரண்டு நாட்டினரும் தங்களுக்கு உரிமையான கடற் பகுதியில் இறையாண்மை உடையவர்கள்’ என்ற ஷரத்து சேர்க்கப்பட்டது.