வலங்கைமான்: வலங்கைமான் பகுதியில் கடந்த மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ததை அடுத்து வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் நெல், எள், பருத்தி உள்ளிட்ட வேளாண்மை பணிகளோடு வேளாண்மை சார்ந்த தொழில்களான மீன் வளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு உள்ளிட்டவைகளில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வேளாண்மையோடு சின்ன சிவகாசி என அழைக்கப்படும் அளவிற்கு பட்டாசு உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. மேலும் வலங்கைமானுக்கு பெருமை சேர்க்கும்விதமாக செங்கல் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளன் ஆற்றுக்கும் இடையே உள்ள நல்லூர் இனாம் கிளியூர், கோவிந்தகுடி, அணியமங்கலம், சந்திரசேகரபுரம், லாயம், பூண்டி, ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், வலங்கைமான், மேல விடையல், கீழ விடையல், கருப்பூர், சித்தன்வாலூர், தொழுவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெற்று வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நல்ல நிறத்துடனும் வலுவாகவும் காணப்படுவதால் கட்டுமான பணிகளில் வலங்கைமான் செங்கற்கட்கு தனி முத்திரை பதித்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நீடாமங்கலம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை திருவாரூர், நாகை, மாயவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்களை கொண்டு செல்வதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிராக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது செங்கல் உற்பத்தி ஜனவரி மாதத்தில் துவங்குவது வழக்கம். இருப்பினும் நெல் அறுவடைக்குப்பிறகு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. செங்கல் உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருவதால் கட்டுமான பணிகள் தேக்கமடைந்து உள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட செங்கல் விற்பனை செய்வதில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இறுதிவரை கனமழை பெய்தது. இதனையடுத்து தரையில் ஈரம் அதிகமாக உள்ளதால் ஜனவரி மாதம் செங்கல் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை அடுத்து ஒரு மாதம் தாமதமாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே செங்கல் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கடந்த மாத கனமழையால் செங்கல் உற்பத்தி துவங்குவதில் தாமதம் appeared first on Dinakaran.