சேலம்: சேலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரிசிபாளையம் முத்தையாள் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் வெள்ளி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ரேகா (38). இவர்களது மகள் ஜனனி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் வீட்டிலேயே வெள்ளி வேலை செய்து வந்தனர். பால்ராஜின் அண்ணன்களான முருகா, அருள் மற்றும் தம்பி செந்தில் ஆகியோரும் அவரது வீட்டின் அருகேயே வசித்து வந்தனர். இவர்களில் முருகா இறந்து விட்டார். பால்ராஜின் தந்தையும் இறந்துவிட்ட நிலையில் தாய் கவுசல்யாவும் அந்த பகுதியிலேயே வசித்து வருகிறார்.
இந்தநிலையில், வங்கியில் பால்ராஜ் கடன் வாங்கி வீடு கட்டினார். இதனால் கடன் தொல்லை ஏற்பட்டது. மேலும் வெள்ளி தொழிலும் சரியாக நடைபெறவில்லை. இதனால் அவர் வங்கி கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று வங்கியில் இருந்து வீட்டுக்கு வந்தவர்கள் பணத்தை கட்டும்படி கேட்டுள்ளனர். இன்று காலையும் வங்கியில் இருந்து வந்துள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் சென்றுவிட்டனர்.
இதனிடையே இன்று காலை ஜனனி, பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் அருகே வசித்து வரும் பால்ராஜின் சகோதரர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. வீட்டினுள் யாரும் இல்லை.
பின்னர் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகியோர் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். 3 பேரையும் சடலமாக மீட்ட இடத்தில் குளிர்பான பாட்டில்கள் கிடந்துள்ளது. இதனால், முதலில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து விட்டு, பின்னர் 3பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பால்ராஜ் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடன் தொல்லையால் சோகம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை appeared first on Dinakaran.