கடலூர்: கடலூரில் இன்று ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு ஊர்களிலிருந்து வந்த சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தின்பண்ட கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், ராட்டினங்கள், குறிப்பாக ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே விற்கப்படும் சுருளிக்கிழங்கு கடைகளும் வைக்கப்பட்டுள்ளன.
வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அதிகாலையில் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்டு வாகனங்களில் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். அத்துடன் இந்த திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை, ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 24 இடங்களில் ஆற்று திருவிழா இன்று நடக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அருகே பிடாகம், அத்தியூர், பேரங்கியூர், எல்லீஸ் சத்திரம், சின்னகல்லிப்பட்டு, கலிஞ்சிக்குப்பம், அண்ராயநல்லூர், அரகண்டநல்லூர், புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், வீடூர் அணை உள்ளிட்ட 24 இடங்களில், பொது மக்கள் ஆறுகளில் திரண்டு வந்து, காலை முதல் மாலை வரை ஆற்றுத் திருவிழாவில் கொண்டாடி மகிழ்வார்கள்.
அண்ணாமலையார் தீர்த்தவாரி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டும் முழுவதும் நடைபெறும் பல்வேறு உற்சவங்களின் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி ஆடிப்பூர உற்சவத்தின்போது கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தக்குளத்திலும், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது பிரம்ம தீர்த்தக்குளத்திலும், சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நாட்களில் பிரம்ம தீர்த்தக்குளத்திலும், தைப்பூச விழாவின்போது கிரிவல பாதையில் உள்ள ஈசானிய குளத்திலும், தட்சிணாயனம், உத்ராயண பிரம்மோற்சவங்களின்போது தாமரை குளம் மற்றும் ஐயங்குளத்திலும் தீர்த்தவாரிகள் நடைபெறும்.
கோயில் குளங்களில் நடைபெறும் தீர்த்தவாரி போன்று அண்ணாமலையார் ஆற்றங்கரைகளில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பதும் மிக பிரசித்திபெற்றது. அதன்படி ஆண்டுதோறும் தை மாதம் 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றிலும், மாசி மாத ரத சப்தமி நாளில் கலசப்பாக்கம் அருகே உள்ள செய்யாற்றிலும், மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியிலும் தீர்த்தவாரி காண்பது வழக்கம்.
The post கடலூரில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா: சாமிகளுக்கு தீர்த்தவாரி appeared first on Dinakaran.