கடலூர்: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், நகைக் கடனுக்கு தனியார் வங்கிகளை விடவும், வட்டிக் கடைகளை விடவும் வட்டி குறைவு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக எளிய, நடுத்தர குடும்பத்தினர், கிராமப்புற விவசாயிகள் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளையே நம்பியிருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் பரவலாக விவசாயப் பணிகளுக்கும், குடும்ப செலவுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர்.
நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள், கடன் பெற்று ஓராண்டு முடியும் போது வட்டி கட்டி கடனை மீண்டும் புதுப்பித்து வந்தனர். இவ்வாறாக நகை ஏலத்துக்கு செல்லாமல், பணம் நெருக்கடியான சூழலிலும் தங்கள் நகைகளை பாதுகாத்து வந்தனர். இந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் எளிய மக்களின் மிகப்பெரும் நம்பிக்கையாக தேசிய மயமாக்கப்பட்டவங்கிகள் உருவெடுத்து நிற்கின்றன.