மதுரை: “அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர். சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை” என திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரி விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மலையாகும். இந்த மலை சமணர் மலையாகும். எனவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கவும், மலையில் சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளத் தடை விதித்தும், திருப்பரங்குன்றம் மலையை மீட்டு பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.